Friday, 22 July 2016

32 வகையான இன்பங்களை ஒரு மனிதன் பெற

32 வகையான இன்பங்களை ஒரு மனிதன் பெற




திருச்சிற்றம்பலம்

 

 

32 விதமான இன்பங்களையும் சுக போகங்களையும் அனுபவிக்க...

 

 http://vivekaanandan.blogspot.in/2013/09/32.html

 

 

திருச்சிற்றம்பலம்

 

1. காலை, மதியம், மாலை என எந்த நேரத்திலும் இந்தப் பன்னிரு திருமுறைப் பாடல்களைப் பாடி இறைவனை வழிபடலாம்.
2. தனி மனித ஆராதனையை விட கூட்டுப் பிரார்த்தனைக்கு வலிமை அதிகம். இறையடியார்கள் தங்கள் குடும்பத்திலுள்ள அனைவருடனும் சேர்ந்து இந்தப் பதிகங்களை ஓதுதல் சிறப்பு. உற்றார், உறவினர், நண்பர்கள், அறிந்தோர், அறியாதோர் என அனைவரையும் ஒன்று திரட்டி இத்திருப்பதிகங்களை ஓதி வந்தால் சமுதாய ஒற்றுமையும், அமைதியும் நிலவ வழி ஏற்படும்.
3. காலை, மதியம், மாலை என்ற மூன்று வேளைகளிலும் தினமும் சந்தியா வந்தன வழிபாடுகளை அனைவரும் நிறைவேற்றியாக வேண்டும். இதற்கு எந்தவித விலக்கும் கிடையாது. காணாமல், கோணாமல், கண்டு சந்தியா வந்தன வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பது சித்தர்கள் வாக்கு. அதாவது காலையில் சூரிய உதயத்திற்கு முன்னும் (சூரியனைக் காணாத போது), மதியம் உச்சி வேளையிலும் (சூரியன் கோணாமல் சரியாக தலை உச்சிக்கு நேராக இருக்கும்போது), மாலையில் சூரியன் மறைவதைக் கண்டும் (சூரிய அஸ்தமனத்தின்போது) சந்தியா வந்தன வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். சந்தியா வந்தன வழிபாட்டைத் தக்க சற்குரு மூலம் அறிந்து நிறைவேற்றுவதே சிறப்பு. அவ்வாறு சற்குரு அமையப் பெறாதோர் இந்த 32 பதிகங்களைக் கொண்ட ஸ்ரீஅகஸ்தியர் தேவாரத் திரட்டுப் பாடல்களைப் பாடி வந்தால் சந்தியா வந்தன வழிபாட்டுப் பலன்களைப் பெறலாம்.
பிரம்மாவை நிந்தித்தால் விஷ்ணுவிடம் சென்று பிராயச்சித்தம் பெறலாம். விஷ்ணுவை வசைபாடினால் சிவபெருமானிடம் சென்று மன்னிப்புக் கோரலாம். அந்தச் சிவனையே திட்டி விட்டால் கூட உத்தம சற்குரு அதற்கும் பிராயச் சித்தம் தருவார். ஆனால், சற்குரு ஒருவரை நிந்தனை செய்தால் ஈரேழு உலகிலும் பிராயச் சித்தம் பெறவே முடியாது. அந்த உத்தம குருவே மனம் வைத்தால்தான் பிராயச் சித்தம் தர முடியும். அறியாமை காரணமாக குரு வார்த்தையை மீறியதற்கு (குருவை நிந்தித்தவர்கள் அல்ல) பிராய சித்தம் தருவதே திருச்சி உய்யக் கொண்டான் மலை ஸ்ரீஉஜ்ஜீவ நாதர் ஆலய தீர்த்தமாகும்.
4. இந்தப் பன்னிரு திருமுறைத் திரட்டுப் பாடல்களைக் காரிய சித்திக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, நோயால் வாடும்போது மந்திரமாவது நீறு ... என்னும் திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருநீற்றுப் பதிகத்தை ஓதி திருநீறு அணிந்து வந்தால் நோய் அகலும். காய்ச்சல், தலைவலி போன்ற நோய்களின் கடுமை தணியும். திருமணம், வீடு, நிலம் போன்ற நியாயமான தேவைகளுக்காகவும், வருமானத்தை மிஞ்சிய செலவு, கடன் தொல்லை போன்றவை நிவர்த்தியாகவும் வாசி தீரவே காசி நல்குவீர் .. என்ற திருஞான சம்பந்த சுவாமிகள் அருளிய தேவாரப் பதிகத்தைத் தொடர்ந்து ஓதி பலன் பெறலாம்.
5. ஒவ்வொரு திருப்பதிகத்தின் இறுதியிலும் திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம் என்று மூன்று முறை ஓதுதல் சிறப்பு.
6. பாடல் பெற்ற சிவத் தலங்கள், மங்கள சாசனம் அமைந்த பெருமாள் தலங்கள் (திவ்ய க்ஷேத்திரங்கள்), சுயம்பு மூர்த்தி அருளும் தலங்கள், கங்கை, காவிரி போன்ற புனித நதிக் கரைகள், துளசி மாடம், பசுமடம், திருஅண்ணாமலை, ஐயர்மலை, பழனி மலை கிரிவலப் பாதைகள், மலைத் தலங்களில் இந்தப் பதிகங்களை ஓதுவதால் வழிபாட்டின் பலன்கள் பன்மடங்காகப் பெருகும். ஆனால், அபரிமிதமான இந்தப் பலன்களை சுயநலத்திற்காகப் பயன்படுத்தாமல் வெள்ளம், புயல், வறட்சி, பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்து மக்களைக் காக்கவும், சமுதாய அமைதிக்காகவும், இன ஒற்றுமைக்காகவும் அர்ப்பணித்தல் சிறப்பாகும்.
7. தமிழ் மொழியும், சமஸ்கிருதம் என்னும் வடமொழியும் இறைவனின் இரு கண்கள் என்பது சித்தர்கள் கூற்று. ஹோமம், வேள்வி, யாக வழிபாடுகளில் தேவமொழியில் அமைந்த மந்திரங்களை ஓதியே ஆஹூதி அளித்து வருகிறோம். ஆனால், தேவமொழி அறியாதோரும் இந்த 32 பதிகங்களில் உள்ள பாடல்களை ஓதி ஹோம, யக்ஞ வழிபாடுகளை மேற்கொள்ளலாம். பொதுவாக, திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியுள்ள திருத்தாண்டகப் பதிகங்களை ஹோம வழிபாட்டிற்காக ஓதுதல் சிறப்பாகும்.
8. மனிதப் பிறவிக்கு வித்தாக அமைவது நாம் செய்த கர்மமே. நிறைவேறாத ஆசையும் கர்மா என்னும் முறையில் பிறவிக்கு வழி வகுக்கும். முறையான எல்லா ஆசைகளையும் நிறைவேற்றி வந்தால்தான் பிறவி இல்லாத நிலையை என்றாவது ஒரு நாள் மனிதன் அடைய குருவருள் துணை புரியும். நியாயமான எல்லா இன்பங்களையும் இந்தப் பிறவியிலோ அடுத்த பிறவிகளிலோ நாம் பெற துணை புரிவதே இந்த 32 திருப்பதிகங்கள். உணவு, உடை, இருப்பிடம், வாகனம், செல்வம், போகம் என மனித அனுபவிக்கக் கூடிய இன்பங்கள் 32 வகைப்படும். இந்த 32 வகையான இன்பங்களை ஒரு மனிதன் பெற வேண்டுமானால் அவன் 32 விதமான அறங்களை நிறைவேற்றியாக வேண்டும். அன்னதானம், ஆடை தானம், கல்வி தானம், விலங்குகளுக்கு உணவு, அநாதை குழந்தைகள் பராமரிப்பு, இலவசத் திருமணங்கள், முதியோர் சேவை என 32 விதமான அறங்களையும் நிறைவேற்றியவர்களுக்கே 32 விதமான இன்பங்களை, போகங்களை அனுபவிக்க ஏதுவான பிறவிகள் அமையும். இந்த 32 விதமான இன்பங்களை ஒரு மனிதன் அனுபவித்த பின்னரே அவன் ஆசைகள் இல்லாத, பிறவி அற்ற நிலையை அடைய முடியும். ஆசை இல்லாத நிலையை அடைந்த மனித மனமே முழு மூச்சுடன் இறை வழிபாட்டில் ஈடுபட முடியும். அணு அளவு ஆசை இருந்தால் ஒரு மனிதனிடம் இருந்தால் கூட அது ஒரு பிறவிக்கு வித்தாக அமைந்து அப்பிறவியில் பல கர்ம வினைகளை உருவாக்கிப் பிறவிகளைப் பெருக்கிக் கொள்ளும் நிலை ஏற்படலாம். இங்கு அளித்துள்ள 32 பதிகங்களை தொடர்ந்து ஓதி வந்தால் 32 அறங்களை நிறைவேற்றும் நிலையை அடைய குருவருள் துணை புரியும்.
9. தர்பைப் பாய், துண்டு, கம்பளி இவைகளின் மேல் அமர்ந்து திருமுறைப் பதிகங்களை ஓதுதல் சிறப்பு.
10. திருமுறைகளை ஓதும்போது அனைவரும் கைகளைக் கோர்த்துக் கொண்டு வட்ட வடிவில் அமர்ந்து வழிபாட்டை மேற்கொள்வதால் மனம் அலைபாயாமல் ஒருமுகப்பட்ட தியானம் எளிதில் கை கூடுவதைக் கண் கூடாகக் காணலாம். வழிபாட்டுப் பலன்களும் பன்மடங்காகப் பெருகும்.
11. தேவ மொழியில் அமைந்த ரிக், யஜூர், சாம, அதர்வணம் என்னும் நான்கு வேதங்கள் ஓதிய பலன்களை ஒட்டு மொத்தமாக அளிக்கவல்லதே இந்த 32 திருமுறைப் பாடல்கள். தேவமொழி அறியாதோரும் வேதம் ஓதிய பலன்களை எளிதில் பெற வழி வகுப்பதே திருமுறைப் பாடல்கள். உதாரணமாக, மந்திரமாவது நீறு என்று தொடங்கும் ஒரு (திருநீற்றுப்) பதிகத்தின் பாடல்களே நான்கு வேதங்களின் பீஜாட்சர சக்திகளை உள்ளடக்கி, நான்கு வேதங்களின் திரட்சியாக அமைகின்றது என்றால் அனைத்துப் பதிகங்களின் பலாபலன்களை எழுத்தில் வடிக்க இயலுமா என்பதை சற்றே எண்ணிப் பாருங்கள்.
12. கடுக்கன், தீட்சை, ருத்ராட்சம், யக்ஞோபவீதம், ஸ்திர கங்கண், வைபவ கங்கண் போன்ற காப்புச் சாதனங்களை அணிந்து திருமுறைகளை ஓதுவதால் வழிபாட்டுப் பலன்கள் பன்மடங்காகப் பெருகும்.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்



*


http://kulaluravuthiagi.com/thirumurai.htm


திருச்சிற்றம்பலம்

 

 


திருச்சிற்றம்பலம்


 தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி



 பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!




வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
 கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
 நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க 
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்




No comments:

Post a Comment